கிராமத்தான் அப்டின்னு யாரவது கூப்பிட்டா எனக்கு என்னமோ இப்போ கோபம்லா வர்றது இல்ல..மாறாக உள்ளுக்குள்ள என்னமோ கொஞ்சம் பெருமையா சந்தோஷமா இருக்கு..இப்போ நிறையபேர் அவங்களோட நகரத்து வாழ்க்கைய விட்டு நகர்ந்து கிராமத்துல இருக்க ஆச படுறாங்க..என்னோட கிராமத்தை பத்தி அங்க இருக்க சூழலை பத்தி நா ஏதாவது சொன்னா அவ்வளவு ஆச்சர்யமா கேக்குறாங்க,அவங்க வாழாத வாழ்க்கைய நாம வாழ்ந்துடோம் அப்டின்னு ஒரு சந்தோஷம் கொஞ்சமா எட்டி பாக்கும் எனக்குள்ள..
எனக்கு அப்போ பத்து வயசு இருக்கும்னு நினைக்குறே, காலைல வீட்ட சாணமிட்டு மொழுகனுமன்னு , என் அம்மா சீக்கிரம் எழுப்புவாங்க ,எழுப்பும் போது அவங்க சொல்ற காரணம் வெளிய எல்லாம் குளிர்காயுறாங்க பாரு எழுந்துரு அப்டின்னு தா...
அந்த எல்லாரும் அப்டிங்குற வார்த்தையிலதான் முழிப்பே வரும் .. பனி காலம் வந்தாலே போகி தான் எங்களுக்கு தினமும் தெருவுல,
அதுஎன்னமோ தெரியல அப்போலாம் ஒரு கூட்டதுக்குள்ள இருந்தாலே ஒரு பெரிய குதூகலம் தான் ..
மாட்டுகொட்டகைக்கு போயி மாட்ட மாத்தி கட்டிட்டு சாணி அள்ளி குப்பைல கொட்டிட்டு வேக வேகமா பெருக்கிட்டு ஓடுவேன் கெணத்துல குதிக்க ..நேரமானா பசங்க விட்டுட்டு போய்டுவாங்க ..ஓடி போய் அதே வேகத்தோட ஒரு குதி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் விழுற சத்தம்அந்த கிணறு அளறிபோகும்..
ஸ்கூல் போற வழியில இருக்குற நாட்டார் கடைல ஐந்து பைசா பத்து பைசா வியாபாரம் எல்லாம் முடிச்சிட்டு ஸ்கூல் போய் சேர்ந்துடுவோம் .. அங்க ஒருத்தன் வரல அப்படின்னா அவனை வீட்டுக்கு போயி தூக்கிட்டு வர சொல்வாரு வாத்தியாரு, பள்ளிக்கூடம் படத்துல காடு பதுங்குறோமே அப்டினு ஒரு பாட்டு வரும்.. அது அப்டியே அங்க நடக்கும்..
சின்ன வயசுல தான் நிறைய வேலைக்கு போயிருக்கேன்னு நினைக்கிறேன் ..ஒவ்வொரு சீசனுக்கு ஏத்த மாதிரி வேல வரும் .ஒரு நேரத்துல விடியற்காலையில் மல்லி பூ பறிக்க போவோம் ,100 கிராம் பறிச்சா ஒரு ரூபா தருவாங்க.. அப்றம் கத்தரிக்காய் பறிக்க ,தக்காளி பறிக்க ..கரும்பு வெட்டும் போது கரும்புசமை தூக்க,அப்றம் கலக்கா (வேர்க்கடலை) புடுங்க,பறிக்க இப்டி வீட்டுக்கு தெரிஞ்சும் தெரியாமையும் போவோம்.. வீட்டுக்கு தெரியாம சேமிச்ச காசு எல்லாம் நாட்டார் கடை செங்கல் மிட்டாய்க்கும் ,அந்த இரும்பு மாதிரி இருக்குற கமரகட்டு மிட்டாய்க்கும் தான் போகும் .. அப்போலாம் கமரகட் மிட்டாய்ல உள்ள காசு இருக்கும் அதுக்காகவே அத வாங்கி கூட்டாளிக்கு கொடுத்துட்டு காசு வருதான்னு அவன் வாயவே பாத்துட்டு இருந்த காலம் எல்லாம் நினைக்கையில் இன்றும் இனிக்கிறது இதயத்தில்...
எங்க வீடு ஓலை வீடு தான்.!
ஓலை குடிசையில் தான்உயிருடன் இருந்தது வாழ்க்கை..
எறவானத்தில்வந்து வந்துவாழ்ந்து விட்டுப் போகும் சிட்டுக்குருவிகள்! காலையில் சத்தமிடும் தவூட்டு குருவிகள் ,அந்த சத்தம் கேட்டுத்தான் பொழுதே விடியும் பல நேரங்களில்..
பானைக்குப்பின்னால்
பூனையொன்றுபோட்ட குட்டிகளுடன் இருக்கும், பூனைக்கு அஞ்சாமல் வாழ்ந்து கொண்டுதான் இருந்ததுஎலிகள் கூட்டம்..
வீட்டில் கட்டியிருக்கும் உறியில் உள்ள கருவாட்டு வாசனைக்கு மாறி மாறி சுற்றி வரும் பூனையும் எலியும்..கதவு திறந்திருந்தாலும்உத்தரவின்றிஉள்ளே நுழையாமல் வாசலிலேயே காவல் காக்கும் நாய்கள், தட்டோடு அதன் முன் நீட்டினாள் தள்ளி நகர்ந்து போகும் ,கீழே வைத்தால் மட்டுமே சாப்பிடும்..
குஞ்சுகளோடுகுப்பை மேடெல்லாம் சுற்றித் திரிந்துஇரைப்பை நிரப்பிக்கொண்டுகூடைக்குள் வந்தடங்கும்கோழி! அப்பாவோடு உழைக்கும்காளைக்கும் கறவலுக்கும்வாசல் வாழ்க்கை..
பள்ளி விடுமுறை விட்டால் வீடியோ கேம் எல்லாம் கிடையாது மாடு மேய்க்கும் வேலை தான்.. மனதார செய்தோம் ..
சோறு கட்டிட்டு மாந்தோப்புல மரத்துக்கு மேல உட்காந்துட்டு தூக்குசட்டியில ராத்திரி வச்ச மீன் குழம்பு தரையில சொட்டுற அளவுக்கு சாப்பிட்டதெல்லாம் இன்னமும் நினைவிருக்கு.. அம்மாவுக்கு தோழியான ஆட்டுக்குட்டி
தாழ்வாரத்தில் தங்கிக்கொள்ளும்.
அன்றுஅந்தக் குடிசைக்குள் இன்னும் பல குடும்பங்கள் வாடகையின்றி வாழ்ந்து கொண்டு இருந்ததை இன்று இந்த வாடகை வீட்டில் இருந்து நினைக்கும் போது வலிக்கிறது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக